இம்மானுவேல் மெக்ரோன் ஐரோப்பாவிடம் முன்வைத்துள்ள முக்கிய வலியுறுத்தல்
ஐரோப்பா, இனி ஒரு வெறும் வர்த்தகச் சந்தையாக மட்டும் இல்லாமல், உலக அரங்கில் ஒரு வலிமையான 'அதிகார சக்தியாக' (World Power) உருவெடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையிலும், அமெரிக்கா தனது பாதுகாப்பு உத்தரவாதங்களிலிருந்து விலகிச் செல்லும் சூழலிலும், ஐரோப்பா ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.
மிகப்பெரிய சவால்
பாதுகாப்பு, தூய்மையான வலுசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் முதலீடு செய்ய ஆண்டுக்கு சுமார் 1.2 டிரில்லியன் யூரோ நிதி தேவைப்படுவதால், ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து 'யூரோபொண்ட்' (Eurobonds) மூலம் கடன் திரட்ட வேண்டும் என்று அவர் முன்மொழிந்துள்ளார்.

அமெரிக்கா ஒரு சட்டபூர்வமான அரசிலிருந்து (State of law) விலகிச் செல்வதாகவும், சீனா ஒரு சர்வாதிகார ஆட்சியாக இருப்பதாகவும் விமர்சித்த அவர், முதலீட்டாளர்களுக்கு ஐரோப்பா ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்றார் ரஷ்யாவிடமிருந்து மலிவான வலுசக்தி கிடைப்பது நின்றுவிட்டது.
இதனாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாலும், 450 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இனி தங்களுக்குள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து தற்சார்பு அடைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மற்ற நாடுகள் தாராளமயமான சந்தை விதிகளைப் பின்பற்றாதபோது, ஐரோப்பா மட்டும் தனது உற்பத்தியாளர்கள் மீது கடுமையான விதிகளைத் திணித்துக் கொண்டிருக்காமல், தனது தொழில்துறையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.