சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்! மத்திய வங்கி அறிவிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை விநியோகம் செய்து பெற்றுக்கொள்பவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அனைத்து புலம்பெயர்ந்த இலங்கையர்களும் தமது வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்டப்பூர்வமான வழிகளை மாத்திரம் பயன்படுத்துமாறு மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
Bank accounts of those who distribute and receive #money through #unlawful money transmission methods will be frozen with immediate effect: @CBSL urges all #migrant Sri Lankans to use only #legal channels to #repatriate their earnings. #SriLanka #GOSL
— Ajith Nivard Cabraal (@an_cabraal) December 1, 2021
இதேவேளை, வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் டிசம்பர் மாதத்தில் இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக் கொடுக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, “உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்படுகின்ற ரூ.2.00 ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக 2021.12.01 தொடக்கம் 2021.12.31 வரையான காலப்பகுதியின் போது உரிமம்பெற்ற வங்கிகள், ஏனைய சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைசார்ந்த வழிகளூடாக தொழிலாளர்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்புகின்ற பணம் இலங்கை ரூபாய்களாக மாற்றப்படுகின்ற போது அத்தகைய நிதியங்களுக்காக ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ஊக்குவிப்பாக ரூ.8.00 கொண்ட தொகையினை கொடுப்பனவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, 2021 டிசம்பர் மாதகாலப்பகுதியில் இலங்கை ரூபாய்களாக மாற்றப்படுகின்ற வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களினால் அனுப்பப்படுகின்ற பணத்திற்காக ஐ.அ.டொலர் ஒன்றிற்கான மொத்த ஊக்குவிப்புத் தொகை ரூ.10.00 ஆக அமைந்திருக்கும்.
இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படுகின்ற மேலதிக ஊக்குவிப்புத் தொகையானது முறைசார்ந்த வங்கித்தொழில் வழிகளூடாக நாட்டிற்கு அதிக தொழிலாளர் பணவனுப்பல்களைக் கவருமெனவும் இதனூடாக உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் வெளிநாட்டு நாணயத்தின் திரவத்தன்மை நிலை மேம்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, முறைசாரா நிதியனுப்பும் வழிகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியினாலும் சட்ட அமுலாக்க அதிகாரிகளினாலும் பல வழிமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக, புலம்பெயர் தொழிலாளர்கள் தம்மைச் சார்ந்திருப்போரின் நலன்களுக்காக அவர்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் வெளிநாட்டுச் செலாவணியினை அனுப்புவதற்கு முறைசார்ந்த வழிகளை தேர்ந்தெடுப்பதை மேலும் ஊக்குவிக்கும்.
