22வது திருத்தச்சட்டம் சம்பந்தாமாக சுதந்திரக்கட்சி சிறந்த முடிவை எடுக்கும்-தயாசிறி ஜயசேகர
அரசியலமைப்புச் சட்டத்தின் உத்தேச 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது பெரும்பாலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு சமனானது என்பதால், அது சம்பந்தமாக சிறந்த முடிவை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்பார்த்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுவின் 30 பேர் எதிர்த்தாலும் நிறைவேற்றுவதில் தடை இருக்காது
22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியிருந்தாலும் அதனை நிறைவேற்ற அது தடையாக இருக்காது.
இந்த திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 147 பேரின் ஆதரவு மாத்திரமே தேவை. இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு இரண்டு நிலைப்பாடுகள் இருப்பது அரசாங்கத்தின் பிரச்சினை எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
திருத்தச்சட்டத்தை எதிர்க்கும் பசில் ராஜபக்ச ஆதரவாளர்கள்
இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாக முடியாது என்ற ஷரத்து 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் இருப்பதால், பொதுஜன பெரமுனவில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆதரவாளர்கள் அதனை எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.