முல்லைத்தீவில் இலவச குடிநீர் இணைப்பினை பெறாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாமூலை, கணுக்கேணி கிழக்கு மற்றும் கணுக்கேணி மேற்கு ஆகிய கிராமங்களை சேர்ந்த குடும்பங்ளில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளாதவர்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவுகளுக்காக வருகை தரும் போது தேசிய அடையாள அட்டை, குடும்ப பதிவு அட்டை மற்றும் காணி தொடர்பான ஆவணங்களுடன் தங்களின் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
மீள் உறுதி
அது மாத்திரமன்றி, மேற்படி பிரதேசங்களில் ஏற்கனவே பதிவுகளை மேற்கொண்டு இதுவரை நீர் இணைப்பை பெற்றுக் கொள்ளாதவர்களும் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களின் பதிவுகளை மீள் உறுதி செய்து கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஜுன் மாதம் 21ஆம் திகதிக்கு பின்னரான பதிவுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு எதிர்வரும் காலங்களில் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |