பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை
வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும், பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் செயற்றிட்டமானது பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரத்தில் மாத்திரம் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாகவும், விலங்கு விசர் நோயைக் கட்டுப்படுத்தும் முகமாகவும் வடக்கு மாகாணத்தின் மூன்று அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும் வகையில் மூன்றாண்டு கால செயற்றிட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக, கடந்த புதன்கிழமை (10.09.2025) தொடக்கம் நல்லூர் மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் செயற்றிட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இந்த வாரமும் இன்று (17.09.2025) தொடக்கம் சனிக்கிழமை வரை நல்லூர் மற்றும் வலி.கிழக்கு பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் மேற்படி செயற்பாடு முன்னெடுக்கபடுவதுடன், வலி.தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் கால அட்டவணைபடி இச்செயற்பாடு இடம்பெறும். பொதுமக்கள் தமது வீடுகளில் உள்ள பெண் நாய்களை கொண்டுவந்து குறித்த தினங்களில் இலவசமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளமுடியும். அதேவேளை நாய்களை பிடித்துவழங்க விரும்புபவர்கள் நாய்பிடிப்பாளர்களாக பிரதேசசபைகளில் பதிந்து, (தமக்கான முற்தடுப்பு ஊசிகளை பெற்று) நாய்களை பிடித்து வழங்கமுடியும். பிடித்து வழங்கும் நாய் ஒன்றறுக்கு 600 ரூபாவை பெற்றுகொள்ளமுடியும், என அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
