சலவைத்தூள் என்ற போர்வையில் மோசடி: அம்பாறை மக்களுக்கு எச்சரிக்கை
சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டிற்கமைய, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, மோசடி செய்யப்பட்டு கவர்ச்சிகரமான பொதி செய்யப்பட்ட நிலையில், சலவைத்தூள் என்ற பெயரில் 1 கிலோ 300 ரூபாவிற்கு பொதுமக்களுக்கு மலிவாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
ஏமாற்றுக் கும்பல்
கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(23) இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த சலவைத்தூள்கள் 1 கிலோ என கூறப்பட்ட போதிலும் அதனை ரூபா 300 கொடுத்து வாங்கி சென்றவர்கள் நிறையின் அளவு குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும், அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தைப்பகுதியில் தற்காலிக கூடாரம் ஒன்று அமைத்து குறித்த கும்பல் போலியான விளம்பரப்படுத்தலுடன் இந்த விடயத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இந்நிலையில் சுமார் 197இற்கும் அதிகமான எடை குறைக்கப்பட்ட சலவைத்தூள் 880 கிராம், 750 கிராம் ,800 கிராம், 670 கிராம் , பெட்டிகள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தன.
சட்ட நடவடிக்கை
இது தவிர இச்சலவைத்தூள் நற்பிட்டிமுனை காரைதீவு பாண்டிருப்பு மருதமுனை பெரிய நீலாவணை பகுதிகளிலும் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றை மீண்டும் குறித்த ஏமாற்றுக் கும்பலிடம் சென்று அதனை கொடுத்து மீண்டும் தங்களது பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த மோசடிக் கும்பலின் சலவைத் தூளினை விற்பனை செய்வதற்கும் அதனை விளம்பரப்படுத்துவதற்கும் சில ஊடகங்களில் கடமையாற்றும் அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீன செய்தியாளர்களும் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் தற்போது சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழங்குத் தாக்கல் செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளதுடன் பொதுமக்கள் இவ்வாறான ஏமாற்று கும்பலிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக துணிகளை சுத்தமாக கழுவும் தூள் என விளம்பரங்கள் பரவலாக செய்யப்பட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு முக்கிய சந்திகளில் வீதியோரங்களில் சலவைத்தூள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











