நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிலையங்களில் இடம்பெறும் மோசடி: மக்கள் குற்றச்சாட்டு (Photos)
வவுனியா - ஓமந்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5000 ரூபாவுக்கு பெட்ரோல் வழங்காவிட்டால் தடைப்பட்ட மின்சாரம் வராது என மின்சாரசபை ஊழியர்கள் அச்சுறுத்தியதாக எரிபொருளை பெற வந்தவர்கள் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
வவுனியா ஓமந்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது புளியங்குளம் பகுதியில் எரிபொருளுக்காக காத்திருந்த மின்சாரசபை ஊழியர்கள் அங்கு எரிபொருள் வழங்கப்படாமையால் ஓமந்தை எரிபொருள் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இதன்போது 2500 ரூபாவுக்கு எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தமக்கு 5000 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என மின்சாரசபை ஊழியர்கள் தெரிவித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நேரத்தில் தடைப்பட்டிருந்த மின்சாரத்தினை வழங்க முடியாது எனவும், குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதுடன்,பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதினையடுத்து மின்சாரசபை ஊழியர்களுக்கு 2500 ரூபாவுக்கே பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா
வவுனியாவில் முறையற்ற விதத்தில் இன்றையதினம் டீசல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக நீண்ட நாட்களாக டீசலிற்காக காத்திருந்த மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட செயலகத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து பல வான்கள் வரிசையில் இன்றி நேரடியாக டீசலினை பெற்றுச்சென்றதுடன், சில வாகனங்களிற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட அதிகளவான எரிபொருளினை நிரப்பி சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான முறையற்ற முறையில் சுமார் 25,000 ரூபாவிற்கும் அதிக தொகைக்குரிய
டீசலினை பெற்ற வான் ஒன்றினை அவதானித்த பொலிஸார் இச்செயற்பாட்டினை தடுத்து
நிறுத்தியதுடன் எச்சரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா
திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீனக்குடா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு சேமித்து வைக்கப்பட்ட 30 லீற்றர் பெட்ரோலை கைப்பற்றி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா
வவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசல் எரிபொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்தமையை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அவரது
வீட்டிலும் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா
வவுனியாவில் சிறுபோக நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ள போதும், டிப்பர் வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடுகளை வழங்க மாவட்ட செயலக அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோரின் தலைமையில் அவசர கூட்டம் ஒன்று மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, தற்போது கட்டுமாண மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் டிப்பர் வாகனங்களுக்கு டீசல் தேவை இருக்காது.
அபிவிருத்தி அல்லது கட்டுமாணப் பணி நடைபெறுகின்றது என்பதை சம்மந்தப்பட்ட திணைக்களம் உறுதிப்படுத்தும் பட்சத்தில் குறித்த டிப்பர்களுக்கு டீசல் எரிபொருள் வழங்கலாம் எனவும் பல டிப்பர்கள் டீசல் எரிபொருளை பெற்று கறுப்பு சந்தையில் விற்பனை செய்கிறார்கள் என குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலராலும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் தேவைக்கேற்ற டிப்பர்களுககு டீசல் வழங்குமாறும் ஏனைய டிப்பர்களுக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி விவசாய அறுவடைக்கு தேவையான டீசலை வழங்குமாறும் கோரப்பட்டது.
அதனை மாவட்ட அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. டிப்பர்களுக்கு கட்டுப்பாடு போட அவர்கள் முன்வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்ட எவருக்கும் தான் வெளியேறும் காரணத்தை கூறாது மேலதிக அரசாங்க அதிபர் இடை நடுவில் வெளியேறிச் சென்றிருந்தார்.
மாவட்ட அரச அதிபரும் டிப்பர் கட்டுப்பாடுகளை போட விரும்ப வில்லை. எனவே மாவட்ட செயலகம் சுயாதீனமாக இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ். நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள் , லொறி என்பவற்றுக்கு டீசல் திருட்டு தனமாக டீசல் விநியோகித்துக்கொண்டு இருந்தவேளை சிலர் அங்கு கூடி நியாயம் கேட்டுள்ளனர்.
அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முரண்பட்டமையால் , பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அப்புறப்படுத்தி சென்றுள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் பிரச்சனை நீடித்து வருகின்ற நிலையில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அல்லது அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டு எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஏனைய மாவட்டங்களில் எரிபொருள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான மற்றும் எரிபொருள் பங்கீடு தொடர்பான பல முன்னேற்ற நடவடிக்கைகள் இடம் பெற்றாலும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் அவற்றில் அக்கறையின்றி செயற்படுவதாகவும் அவர் எரிபொருள் பிரச்சினை தொடங்கிய காலத்தில் இருந்து மன்னார் வருவதை தவிர்த்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானுக்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்ற போது அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட மக்களுக்கு ஒழுங்கான எரிபொருள் வழங்கப்படுவதில்லை எனவும் நள்ளிரவில் வரும் எரிபொருள் இரவோடு இரவாக விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஹட்டன்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவினால் ஹட்டனில் உள்ள தனியார் பஸ்களுக்கு கடந்த காலங்களில் டீசல் வழங்கப்பட்டு வந்தது.
எனினும், கடந்த 7 நாட்களாக ஹட்டன் டிப்போவினால் தனியார் பஸ்களுக்கு டீசல் எரிபொருளை வழங்கவில்லை.
இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன் பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை மறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் (08) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி நீண்ட மற்றும் குறுகிய தூர பிரதேசங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் (08) காலை ஹட்டன் பேருந்து நிலையத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நேற்றைய தினம் சில தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு இன்று டீசல் வழங்கப்படும் என தெரிவித்து டோக்கன் வழங்கப்பட்டதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எனினும், இன்றைய தினம் டோக்கன் வழங்கப்பட்ட பேருந்து உரிமையார்கள் டீசல் பெற்றுக் கொள்வதற்காக சென்ற பொழுது, டீசல் இல்லை முடிந்து விட்டது என ஹட்டன் டிப்போ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்றைய தினம் இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், கடந்த சில நாட்களாக எரிபொருள் கிடைக்காததால் பல தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் உட்பட அத்தியவசிய சேவைகளில் ஈடுப்படுவோரும் பெரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கரைச்சி
கரைச்சி பிரதேச சபையின் சுகாதார சிற்றூழியர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் பிரதேச சபை முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது.
தமது சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட நிலையில், தாம் கடமைக்கு செல்வதற்கு பெட்ரோல் பெற்றுத்தருமாறு கூறியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளிக்க சென்றனர்.
இந்த நிலையில் குறித்த போராட்டக்காரருடன் மேலதிக அரசாங்க அதிபர் எஸ் சிறிமோகன் கலந்துரையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





