அவுஸ்திரேலியாவை பின்பற்றத் தயாராகும் பிரான்ஸ்
அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து 2026 ஆண்டு தொடக்கம் 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை தடை செய்ய பிரான்ஸ் அரசு, திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இது விரைவில் சட்ட ரீதியான சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டு, புதிய ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைய வாரங்களில் அவுஸ்திரேலியாவின் உலகிலேயே முதலாவது சமூக வலைதள தடையை (16 வயதுக்குக் கீழ்) விரைவாக பின்பற்ற வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தடை டிசம்பர் மாதம் அமலுக்கு வந்தது. இதில் ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், டிக்டாக், யூடியூப் ஆகியவை அடங்கும். 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளங்கள் முழு தடை. உயர்நிலைப் பள்ளிகளில் (15-18 வயது மாணவர்கள் பயிலும்) அலைபேசிகளுக்குத் தடை. (தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே இலைபேசி தடை உள்ளது).
இந்த வரைவு விரைவில் ஆய்வுக்கு அனுப்பப்படும். கல்வி தொழிற்சங்கங்களும் உயர்நிலைப் பள்ளி அலைபேசி தடை குறித்து ஆய்வு செய்யும். சமூக வலைதள தடை செப்டம்பர் 2026 முதல் அமலுக்கு வர வேண்டும் என அரசு விரும்புகிறது. சட்ட வரைவில், “பதின்வயதினரின் அதிகப்படியான திரை நேரத்தால் ஏற்படும் ஆபத்துகள்” குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் தகாத உள்ளடக்கங்களுக்கு ஆளாகுதல், ஆன்லைன் இழிவுபடுத்தல், தூக்கக் கோளாறு ஆகியவை அடங்கும்.
எதிர்கால தலைமுறையினரை இத்தகைய ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்ரோன் இம்மாதம் செயிண்ட் மாலோவில் நடந்த பொது விவாதத்தில், இளம் பதின்வயதினருக்கு சமூக வலைதள தடை வேண்டும் என்று உறுதிப்படுத்தினார். அதிக திரை நேரம் இருந்தால் பள்ளி சாதனைகள் குறையும்... மனநல பிரச்சினைகள் அதிகரிக்கும் என கூறினார்.