கிரீன்லாந்து எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு - ட்ரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பு
கிரீன்லாந்து தீவு தொடர்பாக "எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு" உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். இது சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ (NATO) பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் நடத்திய "மிகவும் பயனுள்ள" சந்திப்பிற்குப் பிறகு, தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இறையாண்மை
ஆனால், இந்த ஒப்பந்தத்தின் விபரங்கள் எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை. இது குறித்து மார்க் ரூட்டே கூறுகையில், தானும் ட்ரம்ப்பும் கிரீன்லாந்தின் இறையாண்மை குறித்து விவாதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நாடுகள் தங்களின் 'சிவப்பு கோட்டை' (Red Line) தெளிவுபடுத்தியுள்ளன.
கிரீன்லாந்தின் இறையாண்மையை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் முதலீடுகள் குறித்துப் பேசத் தயாராக இருப்பதாகவும், ஆனால் நாட்டை விற்பனை செய்வது என்பது பேச்சுக்கே இடமில்லை என்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பெடரிக் நீல்சன் கூறியுள்ளார்.
ராணுவப் பலம்
அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி, இந்த ஒப்பந்தம் கீழ்க்கண்டவாறு அமையலாம். சைப்ரஸில் பிரித்தானியா வைத்திருப்பது போன்ற சிறிய ராணுவ தளப் பகுதிகளை கிரீன்லாந்தில் அமெரிக்கா உருவாக்கலாம்.

ரஷ்யா மற்றும் சீனாவின் கப்பல்கள் ஆர்க்டிக் பகுதியில் நடமாடுவதைத் தடுக்க, கிரீன்லாந்தில் தனது ராணுவப் பலத்தை அதிகரிக்க ட்ரம்ப் விரும்புகிறார்.
அதேநேரம் இது கைபேசி மற்றும் மின்சார வாகனங்களுக்குத் தேவையான அரிய வகை தாதுக்கள் கிரீன்லாந்தில் கொட்டிக்கிடக்கின்றன. இதைக் கைப்பற்றுவதும் அமெரிக்காவின் ஒரு இலக்காகப் பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தற்போது கிரீன்லாந்தில் அமெரிக்காவிற்கு ராணுவத் தளம் இருந்தாலும், அது ஒரு குத்தகை (Lease) அடிப்படையிலேயே உள்ளது. ஆனால் ட்ரம்ப், "நாடுகள் உரிமையை வைத்திருக்க வேண்டும், குத்தகையை அல்ல" என வலியுறுத்தி வருகிறார்.
முன்னதாக, கிரீன்லாந்தை விற்காவிட்டால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என மிரட்டிய ட்ரம்ப், தற்போது டாவோஸில் அந்த மிரட்டலைத் திரும்பப் பெற்றுக்கொண்டமை நேட்டோ நாடுகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.