இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியா சென்றுள்ள மேலும் நால்வர்
சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கையை சேர்ந்த நால்வர் இந்தியாவின் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் படகு மூலம் இன்று அதிகாலை இந்தியாவின் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பெண்களும், 2 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்ட ஒன்பது இந்திய கடற்தொழிலாளர்கள் கைது : இழுவை படகு ஒன்றும் மீட்பு |
தமிழகம் சென்றவர்களிடம் விசாரணைகள்
ராமேஸ்வரம் வந்த இலங்கை தமிழர்கள் தாங்களாகவே முச்சக்கரவண்டியில் ஏறி மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதற்கமைய மண்டபம் மரைன் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகளின் போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும், தாங்கள் நால்வரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் முகாமில் பதிவில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடி
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் இலங்கையில் இருந்து 129 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனிலையில் தற்போது 133ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
