சம்பூரில் கைதான மாணவி உள்ளிட்ட நால்வர் விடுதலை தொடர்பில் கிடைத்த தகவல்
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரும் நாளை விடுதலை செய்யப்படலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
கடந்த (12) ஆம் திகதி நள்ளிரவில் திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி மற்றும் ஏனைய மூவர் என நான்கு பேர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தென்னிலங்கையில் பாற்சோறு வழங்குவது தவறில்லையெனின் வடகிழக்கில் கஞ்சி காய்ப்பதிலும் தவறில்லை எனவும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நால்வரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து நால்வருக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல முஸ்லீம் சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆதரவு தெரிவித்து நகர்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
இருப்பினும், இந்த கைது நடவடிக்கையினை பயன்படுத்தி சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தனது வாதத்தினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காணொளியொன்றினை தருமாறும் கோரியுள்ளனர்.
இதற்கு கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர் எனவும், தமிழ் மக்களின் கைதினை சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாகவும் தெிவித்துள்ளார்.
இதற்கமைய, பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரும் நாளை ( திங்கட்கிழமை) விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |