படுகொலை சதித்திட்டம்: முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாலக டி சில்வாவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையிலேயே முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை குறித்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலைசெய்ய திட்டத் தீட்டியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் தொடர்பில் நாலக டி சில்வா 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 123 ஒலிப்பதிவுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியேரின் குரல் மாதிரிகள் அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |