மட்டக்களப்பு பத்திரகாளியம்மன் ஆலய உற்சவத்தில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்
இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பண்ணெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஊர்வீதியுலாவும் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினையும் மகிமையினையும் கொண்ட ஆலயமாக இந்த ஆலயம் விளங்கிவருகின்றது.
விசேட பூஜைகள்
இந்த ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பில் பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அம்பாள் ஆலயம் வருகைதந்தவுடன் தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் சூழ பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேநேரம் இந்த தீமிதிப்பு உற்சவத்தில் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு தீயில் இறங்கி நேர்த்திக் கடன்களை செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |