வெளிநாட்டவர்களால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்
இலங்கைக்கு அந்நிய செலாவணியை உள்ளீர்க்கும் வகையில் வெளிநாட்டவர்களுக்காக புதிய விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால விசா வழங்கும் திட்டத்தை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
'கோல்டன் பாரடைஸ் விசா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டவர்கள் ஒன்லைன் மூலம் விசா பெற முடியும்.
கோல்டன் பாரடைஸ் விசாவின் நன்மைகள்
இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் அங்கிகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு இலங்கையில் வதிவிட விசா வழங்கப்படும்.
இந்த தொகையை வங்கிகளில் வைப்பு செய்யும் வெளிநாட்டவர்கள் முதல் வருட நிறைவில் 50 ஆயிரம் டொலர்களை மீள எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் மீதமுள்ள 50 ஆயிரம் டொலர் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக தொடர்புடைய கணக்கில் வைக்கப்பட வேண்டும்.
சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு
கோல்டன் பாரடைஸ் விசா நடைமுறையின் கீழ் உள்ளீர்க்கும் வெளிநாட்டவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும்.
இலங்கையில் குறைந்தபட்சம் 75 ஆயிரம் டொலர் அல்லது சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.