இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணை நெகிழ வைத்த பொலிஸ் அதிகாரி
இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் நாட்டு பெண் தனது பையை தொலைத்த நிலையில் அதிகாரிகள் அதனை தேடி உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
கண்டி பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதியில் மறந்துவிட்டுச் சென்ற, பையில் சுமார் இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணம் அடங்கிய பையை, பொலிஸ் அதிகாரி இந்திரஜித் மீட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
பை தொலைந்து போனது குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த குறித்த பெண், பங்களாதேஷ் தூதரகத்திற்கும் அறிவித்துள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
கடந்த 31ஆம் திகதி அதிகாலை 4.40 மணிக்கு பங்களாதேஷ் செல்லவிருந்த நிலையில் பை தொலைந்து போயுள்ளது. பயணப் பையில் அவரது கடவுச்சீட்டும் இருந்ததால் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்தார்.

இந்த பொலிஸ் அதிகாரியின் தலையீட்டால் பை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணம் மற்றும் ஏனைய பொருட்கள் குறையாமல் பை மீண்டும் கிடைத்ததை நம்ப முடியவில்லை என அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் வசித்து விட்டு கண்டிக்கு தனது வீட்டிற்கு வந்துள்ள, ஒரு காலத்தில் கண்டி சுற்றுலாப் பொலிஸில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் இந்திரஜித் கடந்த 30ஆம் திகதி கண்டி வேல்ஸ் பார்க் பூங்காவைத் தாண்டி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கைப்பை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதனை பரிசோதித்த போது வெளிநாட்டுப் பெண்ணுக்கு சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பையில் பணமும் கடவுச்சீட்டும் இருந்தபோதிலும், அதன் உரிமையாளரை தொடர்பு கொள்வது பெரும் சிக்கலாக மாறியிருந்தது.
பையில் இருந்த பங்களாதேஷ் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, அதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை பெற்று பொலிஸ் சார்ஜன்ட் அவரை தொடர்பு கொண்டுள்ளார்.
வட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டு பையும் பணமும் பாதுகாப்பாக இருப்பதாக காணொளி மூலம் காட்டிய பின்னர் பையை பெற்றுக்கொள்ள கண்டிக்கு வந்தால் தனது விமானம் தவறவிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரி பையைக் கொண்டு கொழும்புக்கு சென்று அதனை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மொனோவரா அக்தர் சௌத்ரி என்ற பெண், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சேவையை பாராட்டியவாறு கடந்த 31ஆம் திகதி அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.