உணவுப் பணவீக்கம் வீழ்ச்சி! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 25.2 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 21.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மே மாதத்தில் சாதகமான வீழ்ச்சி
ஏப்ரலில் பணவீக்கமானது 35.3 வீதமாகவும், உணவுப் பணவீக்கம் 30.6 வீதமாகவும் காணப்பட்ட நிலையிலேயே மே மாதத்தில் சாதகமான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தின் இந்த வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்ரலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சி பாதைக்கு அமைவாக காணப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உணவுப் பணவீக்கமானது ஏப்ரலில் 30.6 வீதத்திலிருந்து மே மாதத்தில் 21.5 வீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. உணவல்லாப் பணவீக்கம் ஏப்பிரலில் 37.6 வீதத்திலிருந்து 27 வீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் ஏப்ரலில் 27.8 சதவீதத்திலிருந்து மே மாதம் 20.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒற்றை இலக்க மட்டங்களை நோக்கி பணவீக்கம் குறையும் சாத்தியம்
இவ்வாண்டின் 3ஆம் காலாண்டில் ஒற்றை இலக்க மட்டங்களை நோக்கி பணவீக்கத்தினை தொடர்ந்தும் குறைவடையச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிதிக்கொள்கையை உறுதியாக பேண வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடுமையான நிதிக் கொள்கை காரணமாக, செப்டெம்பர் மாதம் 70 வீத பண வீக்க அதிகரிப்பை தடுக்க முடிந்தது.
ஜூலை மாத இறுதியில் எதிர்பாரக்கப்படும் விடயம்
இதனால், தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருகிறது. பணவீக்கம் குறைந்ததால், அதிகரித்த வட்டி வீதத்தை ஓரளவு குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனவரி மாதம் திறைசேரி முறிகளின் மூன்று மாத வட்டி வீதம் 33 வீதமாகக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணவீக்கம் மிக வேகமாகக் குறைந்து ஜூலை மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |