நேபாள வெள்ளப்பெருக்கு: ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் வெளியிடும் இலங்கை!
நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாள மக்களுக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் அமைச்சர் விஜித ஹேரத் பதிவொன்றை இட்டுள்ளார்.
நேபாளத்தில் நிலவும் பேரழிவுச் சூழ்நிலை குறித்துத் தாம் மிகுந்த வேதனையடைவதாகவும், இந்த இயற்கைச் சீற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளப் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நேபாள அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பான முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்தச் சவாலான சூழ்நிலையிலிருந்து நேபாள மக்கள் மீண்டு வர, இலங்கை அரசும் அதன் மக்களும் நேபாள அரசுடனும் மக்களுடனும் முழுமையான ஆதரவுடன் துணைநிற்பார்கள் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.