நுவரெலியா- கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றாக சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அறுவடை காலங்களில் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளதுடன் விவசாயத்தை சார்ந்துள்ள பல்வேறு தொழில்களும் தற்போது வரை நலிவடைந்து வருகிறது.
நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் மரக்கறிச் செய்கை நிலங்களில் வெள்ள நீர் உட்பிரவேசித்தது. அதன் விளைவாக மலைநாட்டு மரக்கறி பயிர்ச் செய்கைகளும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.
விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்
இதில் கரட்,லீக்ஸ்,கோவா மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன ஏராளமாக அழிவடைந்துள்ளன.

அத்துடன் வெள்ளநீரால் பல்வேறு பூச்சிகள் தாக்குதலால் மரக்கறி வகைகள் பாதுகாக்க முடியாத நிலையில் பல்வேறு நோய்களால் பாதிப்படைந்து வருகிறது.
இது பயிர்கள் சேதமடையவும், விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படவும் காரணமாகிறது.
கோரிக்கை
மேலும் வேகமாக வரும் வெள்ள நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு மண் வளம் பாதிக்கப்படுகிறது இதனால் நிலமும் சேதப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.