யாழ் வீதியொன்றில் வெள்ள ஆபத்து : சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - கஸ்தூரியார் வீதியின் ஆரம்பத்தில் உள்ள வடிகால் ஒன்று குப்பைகளால் நிறைந்து காணப்படும் நிலையில் அந்த வடிகால்கள் ஊடாக நீர் வடிந்து செல்வதில் ஏற்படும் தடையினால் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படவும் வாய்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மக்கள் வந்து செல்லும் பிரதான வீதியில் அழுக்குகள் குவிந்து துர்நாற்றம் வீசும் நிலை அசௌகரியமானது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரவு வேளையில் ஸ்ரான்லி வீதியில் உள்ள குப்பைகளை கூட்டி அள்ளி அகற்றுவதைச் சுட்டிக்காட்டி அது போல் இந்த வாய்க்காலின் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி விடலாம்.
ஆயினும் அது கருத்தில் எடுக்கப்படவில்லை என இது தொடர்பில் அப்பகுதி கடை உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் தேவை
கஸ்தூரியார் வீதி யாழ் நகரில் இருந்து ஆரம்பமாகும் வீதிகளில் ஒன்றாகும்.அதிகளவான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த வீதியில் நகரின் பக்கமாக உள்ள ஒரு வடிகாலினுள் குப்பைகள் அதிகமாக சேர்ந்து அந்த வடிகால் பகுதியை நிறைத்துள்ளன.
வடிகாலினுள் தொடர்ந்து குப்பைகள் சேர்ந்து பயணப்பட்டு முழு நீளத்திற்கும் தேங்கிக் கொள்ளும் அபாயம் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது.பிரதான வாய்க்காலோடு இணையும் இடத்தில் இரும்புக் கம்பி வலைகளால் தடுப்பிடப்பட்டுள்ளது.அந்த தடுப்போடு தான் இந்த குப்பைகள் தேங்கியுள்ளன.
உடனுக்குடன் இவை அகற்றப்படும் போது அந்தப் பகுதி தூய்மையோடும் நல்ல பார்வைப் புலத் தோற்றத்தோடும் இருக்கும் என ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நடைபாதை
வடிகால் மீது போடப்பட்டிருந்த சீமெந்து தட்டு அகற்றி அதனருகில் வைக்கப்பட்டுள்ளதோடு அந்த பகுதியின் தோற்றம் அழுக்குகளைக் காணும் படி இருக்கின்றது.
கஸ்தூரியார் வீதியின் இடப்பக்கத்தில் உள்ள நடைபாதை இதற்கு மிக அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வீதியில் ஓரத்தில் அமையும் நடைபாதைக்கும் கடைத்தொகுதிகளின் முன்னுள்ள கடைகளுக்குச் செல்வதற்கான நடைபாதைக்கும் இடையில் இந்த வடிகால் இருக்கின்றது.
குப்பைகள் நிறைந்திருப்பது நடந்து செல்பவர்களை முகம் சுழிக்கச் செய்து விடுவதாகவும் அச்சூழல் அவதானிப்பாளர்கள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதசாரிகள் சிலரிடையே மேற்கொண்ட கேட்டலின் போது உடனுக்குடன் அகற்றும் போது ஏற்படும் நன்மைகள் அதிகம் தான்.இவற்றைக் கடந்து செல்லும் போது கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருக்கின்றது என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.
அழகிய வீதிகள்
நகரின் மத்தியில் உள்ள வீதிகளின் கட்டமைப்பு நேர்த்தியும் தூய்மையான தன்மையும் அழகிய தோற்றத்தை வீதிக்கு கொடுக்கும்.
இதனால் அந்த நகரின் வீதிகளில் பயணிக்கும் போது அழகிய நகரம் என்ற எண்ணப்பாடு பயணிகளிடையே ஏற்பட்டுவிடும்.
மாநகர சபையினால் ஏன் இது தொடர்பில் கவனமெடுக்க முடியவில்லை.சாதாரணமாக ஒரு சிறிய வடிகாலினுள் இருக்கும் கழிவுகளை அகற்றி அந்த பகுதியின் தூய்மையில் கவனமெடுப்பதில் உரிய அதிகாரிகள் அக்கறையற்று இருப்பதாகவே இதனைக் கருத முடியும்.
வீதியில் இரவுப் பொழுதில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதனை அவதானிக்கலாம். அத்தகைய ஒரு சூழலில் வடிகாலைத் திறந்து குப்பைகளை அகற்றி விட்டு அந்தப் பகுதியை தூய்மைப்படுத்தி விடலாம்.
அப்போது தான் பயணிகளிடையே இது பற்றிய பேச்சுக்களுக்கு இருக்கும் வாய்ப்புக்கள் அகற்றப்பட்டு விடும் என்பதையும் உரிய மாநகராட்சி அதிகாரிகள் கருத்தில் எடுத்திருக்க வேண்டும்.
செய்வன திருந்தச் செய் என்பது இதற்கு பொருத்தமானதாக இருக்கும் என இது தொடர்பிலான கருத்துக்களை கேட்ட போது மாநகராட்சி ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |