நாட்டில் வெள்ள அபாய நிலை நீங்கியுள்ளது!
நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்சமயம் வெள்ள அபாயம் எதுவுமில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இன்று காலை தெரிவித்துள்ளார்.
அப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி 20 மில்லிமீட்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் நேற்று மழை பதிவாகியிருந்த போதிலும், அப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி குறைந்த அளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீட்டருக்கும் குறைந்த அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழைவீழ்ச்சி குறைந்துள்ளமையினால் நாட்டின் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்த்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைக்கு எவ்வித வெள்ள அபாயமும் உருவாகவில்லை என எல்.எஸ்.சூரியபண்டார மேலும் உறுதிப்படுத்தினார்.