தென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட யாழ். இளைஞர்கள்! - விசாரணையில் வெளியான தகவல்கள்
கம்பஹா - அத்தனகல்ல (Attanagalla) பகுதியில் வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த ஐவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட ஐவரில் இருவர் முன்னாள் போராளிகள் எனவும், அவர்கள் புனர்வாழ்வு பெற்று சமூக மயப்படுத்தப்பட்டவர்கள் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞர்களின் கையடக்கத் தொலைபேசிகளை சோதனைச் செய்துள்ள போது, அதில் பல்வேறு ஆவா குழுவுடன் தொடர்புடையோரின் புகைப்படங்கள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் கனடாவில் உள்ள ஒருவருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பிலிருந்துள்ள நிலையில், அது தொடர்பில் விஷேடமாக அவதானம் செலுத்தி விசாரித்து வருவதாகவும் விபொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதன்போது நான்கு, ஏழு அங்குல மற்றும் எட்டு அங்குல கத்திகளையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியிருந்தனர்.
அத்தனகல்ல பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் இருப்பதாக மேல் மாகாணத்தின் பொறுப்பான மூத்த டிஐஜி தேசபந்து தென்னக்கோனுக்கு கிடைத்த தகவலின் படி, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி.....
யாழ். இளைஞர்கள் ஐவர் கம்பஹாவில் திடீர் கைது!