துப்பாக்கி தோட்டாக்களுடன் வசமாக சிக்கிய ஐவர்
சியம்பலாண்டுவ - கொட்டியாகல பிரதேசத்துக்குட்பட்ட வத்தேகம கெபலித்த காட்டுப்பகுதிக்குள், டிரக்டரில் மாட்டெருக்குள் மறைத்து வைத்துக்கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் 09, கூர்மையான கத்தியுடன் சந்தேகநபர்கள் ஐவரை வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் சியம்பலாண்டுவ காரியாலய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தெமகஹவல, அலியாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வனப்பகுதிக்குள் மாட்டெருவை ஏற்றிக்கொண்டு டிரக்டர் செல்கையில், குறித்த பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் டிரக்டரை மறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போதே, துப்பாக்கி, தோட்டாக்கள் 9, கூர்மையான கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மாட்டெருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களுடன் இரண்டு வெற்று தோட்டா கோவைகள் உள்ளிட்ட பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.