தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: மயிலிட்டி சங்கத் தலைவர் குற்றச்சாட்டு
வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கடற் படையைக் கடலில் காணவில்லை என மயிலிட்டி கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் குணராஜன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று(10.11.2023) இடம் பெற்ற இந்திய கடற்றொழிலாளர்களின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு கோரி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களினால் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இந்தியா அத்துமீறிய இழுவைப் படகுகள் சாதாரணமாக எமது கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் இலங்கை கடற்படையை கடற்பகுதியில் காணவில்லை.
எமது கடல் வளங்கள் தொடர்ச்சியாக சூறையாடப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து மீன இறக்குமதி இடம் பெறுகின்றது.
இந்தியா அத்துமீறிய படகுகளினால் எமது கடற்றொழிலாளர்களின் தொழில்கள் அழிக்கப்பட்டுவரும் நிலையில் பிடிக்கப்படும் மீன்களைக் கூட உரிய விலையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே கடற்தொழில் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக தலையீடு செய்து எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.




