காணாமல் போனவர்கள் தொடர்பான அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வருவார்கள் என நம்ப முடியாது என கடற்றொழில் அமைச்சர்(Ramalingam Chandrasekar) தெரிவித்த கருத்துக்கு தமிழர் பகுதிகளிலிருந்து கண்டனங்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு, “அவர்கள் காணாமல் போனதில் இருந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டதாகவும், அவர்கள் திரும்பி வருவார்கள் என நம்ப முடியாது என நீரியல்வள மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் (ARED) செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
வன்மையான கண்டனம்
மேலும், அமைச்சர் தெரிவித்த கருத்து, 2,837 நாட்களாகத் தொடர்ந்து தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடிக் கொண்டிருக்கும் போரில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் 15 வருடங்களாக இந்த பிள்ளைகளை தேடி போராடிக்கொண்டிருக்கின்றோம் என்பதைவிட, 2,837 நாட்களாக நாங்கள் ஒரு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 300ற்கும் மேற்பட்ட பெற்றோர் களத்திலே உயிரிழந்துள்ளனர். அப்படியிருந்தும் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றோம். பெற்றோரின் மன நிலையைப் பற்றி அறியாத அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது அவர்களுக்கு மனவேதனையை அளிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பு
இதேவேளை, கடற்றொழில், நீரியல்வள மற்றும் கடல் வள அமைச்சரின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன், அமைச்சர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் செயற்பாடுகளை நினைவு கூர்ந்ததோடு, அவரது கட்சி ஏற்படுத்திய அழிவுகளும் வெளிச்சத்திற்கு வரும் என்பதால் அமைச்சர் இவ்வாறான கருத்தைக் கூறியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் முதலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
அப்படி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் அதுத் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியும். அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் அதனுடன் தொடர்புடையவர்கள் கூண்டில் ஏற்றப்படலாம் என தெரிவித்துள்ளார்.
உயிருடன் பதினான்கு பேர்
சுமார் ஏழு வருடங்களாக இயங்கி வரும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம், பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் பதினான்கு பேர் உயிருடன் இருப்பதை அண்மையில் கண்டுபிடித்திருந்தது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) உறுப்பினர் தம்பையா யோகராஜா, 2024 நவம்பரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர்கள் குறித்த தகவல்களை தற்போது வெளியிட முடியாது என தெரிவித்திருந்தார். 17 பேரின் தலைவிதியை எங்கள் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 14 பேர் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம். இந்த 14 பேரும் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். இருப்பினும் அந்தத் தகவலை வெளியிடும் நிலையில் நாங்கள் இல்லை. சம்பந்தப்பட்ட நபர்களின் சம்மதத்தைப் பெற்று தேவையான நடவடிக்கைகளை எடுத்த பின்னர், உரிய தகவல்களை வெளியிடுவோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
OMP பிரதிநிதி தம்பையா யோகராஜா கிளிநொச்சியில் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனோர் தொடர்பில் தமது அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
“எமது காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு இதுவரையில் 21,630 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்பப்படிவங்களில் பொலிசார் மற்றும் முப்படையினரதும் விண்ணப்பங்களும் மற்றும் டுப்ளிகேட் பைல்ஸ் இவற்றை கழித்து மிகுதியாக, இதில் 14,988 விண்ணப்ப படிவங்கள், கோவைகள் விசாரணைக்காக எம்மிடம் உள்ளன. அவற்றில் இதுவரை 6,788 கோவைகளின் பூர்வாங்க விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதில் 3,800க்கும் மேற்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம், இந்த இடைக்கால நிவாரணம் ரூபாய் இரண்டு இலட்சம், ஒவ்வொரு முறைப்பாட்டாளருக்கும் வழங்கியுள்ளோம்.” காணப்படாமைக்கான சான்றிதழ் வழங்கப்படுவதன் அடிப்படையில் 3,000ற்கும் அதிகமான சான்றிதழ்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் 2018 பெப்ரவரி 28ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போனமை தொடர்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 04 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.