குருந்தூர்மலை குளத்திற்கு அருகில் தீ பரவல்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள குருந்தூர் மலைக்கு அருகில் உள்ள குருந்தூர் குளத்திற்கு அண்மையில் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் 2 ஏக்கர் வரையான வயல் நிலங்கள் மற்றம் காய்ந்த மரங்கள் என்பன எரிந்துள்ளன.
அத்துடன், வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியிலும் இந்த தீ பரவியுள்ளது.
தீ பரவல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேக்கங்காடுகள் மற்றும் பொது மக்களின் பனை தோட்டங்கள் என்பன தீ வைக்கப்பட்டும் தீ விபத்தினையும் எதிர்கொண்டு வருகின்றமை அண்மைக்காலத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் தீ பரவல் தொடர்பில் மக்களுக்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.
“முல்லைத்தீவில் தற்போது வறட்சியான காலப்பகுதியில் பனை மரங்கள் மற்றும் ஏனைய வளங்களை எரிப்பது போன்ற தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காக சில நபர்களால் வேண்டுமென்றே தீ மூட்டப்படும் அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றோம்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த தீ கட்டுக்கடங்காமல் பரவி, மரங்களுக்கு மட்டுமின்றி, அருகிலுள்ள கிராமங்களுக்கும், சில வீடுகளுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி, அப்பாவி மக்களை பாதிக்கிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்களை கையாள பிரத்தியேகமான தீயணைப்பு படை இல்லை.
தன்னார்வத் தொண்டராக பிரதேச சபைகள் தீயைக் கட்டுப்படுத்த குறைந்த வளங்கள் மற்றும் அடிப்படை நுட்பங்களுடன் தங்களால் இயன்றதைச் செய்து வரும் நிலையில், நிலைமையை நிர்வகிப்பது கடினமாகி வருகிறது.
பிரதேச சபையில் பணியாளர்கள் இல்லாததால், வேலை நேரத்தில் மட்டுமே உதவி கிடைக்கும், அத்துடன் சாதாரண தண்ணீர் பௌசர்களை பயன்படுத்தி தீயை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு என்ற வகையில், இந்த வறட்சியான காலத்தில் தீ வைப்பதை தவிர்க்குமாறு அனைத்து பொதுமக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் சொத்து அல்லது சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உங்கள் அண்டை வீட்டாரோ அல்லது வேறு எவரேனும் தீ வைப்பதை நீங்கள் கவனித்தால், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உடனடியாக உங்கள் கிராம சேவையாளரிடம் முறைப்பாடு செய்யவும்.
தீ விபத்துகளைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும், மேலும் நமது வீடுகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அண்மையில் பனை மரங்களுக்கு வீட்டின் உரிமையாளர் தீ வைத்து எரித்த தீயானது மற்ற பகுதிகளுக்கும் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது.
விழிப்புடன் இருங்கள் மற்றும் எங்கள் பகுதியில் தீயை கட்டுப்படுத்த ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும்” என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு, மக்களுக்கான அறிவிப்பினை விடுத்துள்ளது.