நுவரெலியாவில் 16 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ விபத்து
நுவரெலியா, இராகலை தோட்டத்தின் இரண்டாம் பிரிவில் 16 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
குறித்த தோட்டத்தில் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரியவகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், பெருமளவில் பொருட்தேசங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட ஆலயத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேசசபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப் பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.










