கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
கிளிநொச்சி (Kilinochchi) - இரணைதீவுக்கு அண்மித்த கடற்பபகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய கடற்றொழிலாளர்களில் 19 பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு,இரண்டு படகோட்டிகளுக்கு தலா ஆறு மில்லியன் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் செலுத்த தவறின் ஆறு மாதகால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு
இந்தநிலையில், மற்றைய படகிற்குரிய வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த (26-01-2025) அதிகாலை 2 மணியளவில் இரணைதீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட மூன்று இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 34 இந்திய கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் கடந்த 26ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இன்று (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தண்டப்பணம்
குறித்த வழக்கானது இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டு படகுகளில் பயணித்த 19 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தண்டப்பணம் செலுத்த தவறின் ஆறு மாத கால சாதரண சிறை தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், படகு மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் என்பன அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் 15 பேர் பயணித்த மற்றைய ஒரு படகின் பதிவு இலக்கம் வேறுபட்டு காணப்பட்டதனால் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு தவணையிடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |