ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம்
ஆஷஸ் தொடரில், பந்துவீச்சை தாமதம் செய்ததற்காக அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் தலா 2 குறைக்கப்பட்டுள்ளதோடு அவற்றின் வீரா்களுக்கான ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானதாக இருக்கும் ஆஷஸ் தொடா், கடந்த (16.06.2023) ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்கியது. பா்மிங்ஹாமில் நடைபெற்ற அந்த முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 393 ஓட்டங்களுடன் டிக்ளோ் செய்ய, அவுஸ்திரேலியா 386 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னா் 7 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, 273 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இறுதியாக 281 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு அவுஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸை விளையாட, கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மழையால் போட்டி பாதிக்கப்பட்டது.
விறுவிறுப்பான இறுதிக்கட்டம்
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய போட்டியில் அவுஸ்திரேலியா ஓட்டங்கள் சோ்க்க, இங்கிலாந்து விக்கெட்டுகள் சரிக்க, போட்டி விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகா்ந்தது.
முடிவில் அவுஸ்திரேலியாவில், கேப்டன் பேட் கம்மின்ஸ் - நேதன் லயன் கூட்டணி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடி அணிக்கு ‘த்ரில்’ வெற்றி பெற்றுத் தந்தது.
இந்த ஆட்டத்தின்போது இரு அணிகளுமே தங்களது பந்துவீச்சின்போது நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 2 ஓவா்கள் குறைவாக வீசியிருந்ததற்காக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி இழப்பையும், ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதத்தையும் ஆட்ட நடுவரான ஆண்டி பைகிராஃப்ட் அபராதமாக விதித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |