திலினி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
பல கோடி ரூபா மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் மேலும் பல தொலைபேசிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சோதனைக்காக எதிர்காலத்தில் பல இடங்களுக்கு திலினி பிரியமாலி அழைத்துச் செல்லப்படுவார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒலிநாடாக்களைப் பயன்படுத்தி பிரியாமலி தொடர்பான விசாரணையை விரிவுபடுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலும் இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகளில் ஒன்று கொழும்பு - குருந்துவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடமிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
75 கோடி ரூபாய் மோசடி
75 கோடி ரூபாய் மோசடி செய்ததாக திலினி பிரியாமாலி மீது தொழிலதிபர் புகார் அளித்துள்ளார்.
மற்றைய முறைப்பாடு கொழும்பில் வசிக்கும் மற்றுமொருவரால் செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தன்னிடம் ஏழு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர் மீது பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 11 ஆகும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது திலினி பிரியமாலி உலக வர்த்தக மையத்தில் இயங்கி வந்த வர்த்தக நிறுவன ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற ஆரம்பித்துள்ளது.




