நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் அவசியம்: ஜனாதிபதி ரணில் வலியுறுத்து
நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என்றும் அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களைக் கண்டறிவதற்காக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (12.07.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிலிருந்தும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும். ஆனால், அது பெரும்பாலும் அரச செலவின செயற்பாடுகளில் முன்னெடுக்கப்படுவதில்லை.
நாட்டில் பொருளாதார நெருக்கடி
அரச வருமானத்தை மறைப்பது மாத்திரமன்றி எந்தவித பலனுமற்ற நடவடிக்கைகளுக்காக அரச நிதி கட்டுப்பாடற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதும் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது.
அத்துடன், கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக இந்த விடயம் தொடர்பில்
நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமையே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப்
பிரச்சினைகளுக்குப் பிரதான காரணமாகும்.
வருமான வரி மற்றும் அரச நிதி நிலைமை குறித்து ஆராய தற்போது நாடாளுமன்றத்தில் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கூறியுள்ளார்.
முறையான சூழலை உருவாக்குதல்
மேலும் இராஜாங்க அமைச்சரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்க மற்றும் கலால் திணைக்களங்கள் என்பவற்றின் வருமான இலக்குகளை அடைவதற்கான முறையான சூழலை உருவாக்குதல், அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதற்கான டிஜிட்டல் பொருளாதார பின்னணியைத் தயார் செய்தல் தொடர்பான முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த முன்மொழிவுகள் குறித்து மேலும் கலந்துரையாடி நாடாளுமன்ற முறைமைகள் (Ways and Means) குழுவிடம் சமர்ப்பிக்குமாறு இராஜாங்க அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்
அத்துடன், இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி, பரந்த ஊடகப் பிரச்சாரத்தின் ஊடாக இது தொடர்பில் முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கியுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, நிதி அமைச்சின் பதில் செயலாளர் ஆர்.எம். பி. ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |