ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மேல்முறையீடானது தொழிலதிபர் சி.டி. லெனாவா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மனுவில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதியை நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க கடந்த மாதம் 29 ஆம் திகதி(29.06.2024) தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது என்றும் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இத்தேர்தலுக்கு பயன்படுத்த முடியும் எனவும் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய 21.06.2024 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலை மட்டும் பிற்போட முடியாது என்றும், தேர்தலுக்கான முதற்கட்ட வேலைத்திட்டங்களை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |