ஃபெங்கல் புயலின் தாக்கம்: தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘ஃபெங்கல் ’(Fenjal strome) புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் - தமிழ்நாடு உள்ளிட்ட பல பிரதேசங்கள் கனமழையினால் பாதிப்புக்குள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ தொடக்கம், 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.
இந்த புயலானது புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிவப்பு எச்சரிக்கை
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், எனவே, இப்பகுதிகளுக்கு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலின் மையம்
தற்போது, சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம், கூறியுள்ளது.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |