பெண் ஊழியர்கள் செய்த முறைப்பாடுகள்! உள்ளக விசாரணை தொடர்பில் பிரதி சபாநாயகர் அறிவிப்பு
மூத்த அதிகாரிகளின் பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் செய்த முறைப்பாடுகள் தொடர்பில் மூவரடங்கிய குழு உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் சம்பவங்களில் ஈடுபட்ட மூத்த அதிகாரிகளால் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் அவ்வாறான துன்புறுத்தல்கள் அல்லது தாக்குதல்கள் இடம்பெறவில்லை என எழுத்துமூலமான உறுதிமொழியை வழங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
எனவே இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படுமா
என்பதில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு
காரணமானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்
ரோஹினி குமாரி விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.




