அமைச்சரவைத் தீர்மானத்தை சட்டரீதியாகச் சவாலுக்கு உட்படுத்தப் போவதாக கூட்டமைப்பு தெரிவிப்பு
இலங்கையில் மாகாண அரசுக்கு உட்பட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசு கையேற்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை சட்டரீதியாகச் சவாலுக்கு உட்படுத்தப் போவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்படி அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், மாகாணங்களின் அதிகாரங்களைச் சிறிது சிறிதாகப் பறித்தெடுக்கும் அரசின் இரகசிய நோக்கத்தை இந்த நடவடிக்கை தெளிவாக வெளிக்காட்டுகின்றது என்று தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கிலுள்ள நிறுவனங்களைக் கையகப்படுத்தி இந்த மாகாணசபைகளை
அதிகாரமற்ற அமைப்புக்களாக மாற்றுவதுடன் மாகாணசபைகளையும் செயலிழக்க செய்யும்
நோக்கம் அரசுக்கு இருக்கின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




