ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு FCID விடுத்துள்ள எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நிதி குற்ற விசாரணைப் பிரிவு (FCID) இன்று (05) முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவர் முன்னிலையாக தவறினால், கைது செய்ய நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சத்தோசா நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு லொரியை தவறாக பயன்படுத்தியதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு, அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
இது தொடர்பாக, லங்கா சத்தோசாவின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் இந்திக ரத்னமலல் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வத்தளை நீதவான் நீதிமன்றம் ஜனவரி 09 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு, சத்தோசா லொரியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கி, அதனை அமைச்சரின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கென்ற வகையில் பதிவுகளை மாற்றியமைத்ததாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹான் பெர்னாண்டோவும் கைது செய்யப்பட்டு ஜனவரி 09 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.