அமெரிக்காவில் இரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு : FBI அதிகாரிகள் அதிரடி சோதனை
அரச ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாகக் கசியவிட்டமை தொடர்பான விசாரணையில், அமெரிக்காவின் முன்னணி நாளிதழான 'வொஷிங்டன் போஸ்ட்' (Washington Post) செய்தியாளர் ஒருவரின் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
வொஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தியாளர் ஹன்னா நாட்டன்சன் என்பவரது வர்ஜீனியா இல்லத்தில் இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது.
சட்டவிரோதமாகப் பகிர்ந்து கொண்டமை
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஃபெடரல் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் அரச அமைப்புகளை மாற்றியமைப்பது குறித்து ஹன்னா தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி வந்தார்.
சோதனையின் போது அவரது கைபேசி, தனிப்பட்ட கணினி, அலுவலகக் கணினி மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பென்டகன் (அமெரிக்க பாதுகாப்புத் துறை) ஒப்பந்ததாரர் ஒருவர் ரகசியத் தகவல்களைச் சட்டவிரோதமாகப் பகிர்ந்து கொண்டமை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பாக ஆரேலியோ பெரெஸ்-லுகோன்ஸ் என்ற கணினி தொழில்நுட்ப வல்லுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது காரில் மதிய உணவுப் பெட்டியில் ரகசிய ஆவணங்களை மறைத்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இது குறித்து அமெரிக்க சட்டமா அதிபர் பாம் பொண்டி கூறுகையில், "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ரகசியத் தகவல்களைக் கசியவிடுவதை ட்ரம்ப் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது" என்று எச்சரித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர் ஹன்னா நாட்டன்சன் இந்த வழக்கின் நேரடி இலக்கு இல்லை என்று அதிகாரிகள் கூறினாலும், பத்திரிகையாளர் வீட்டில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை ஊடகச் சுதந்திரம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜோ பைடன் காலத்தில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சில பாதுகாப்பு உரிமைகளை, கடந்த ஏப்ரல் மாதம் சட்டமா அதிபர் ரத்து செய்தார்.
செய்தியாளர்கள் தங்கள் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழலில், இதுபோன்ற சோதனைகள் ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் என்று பத்திரிகை சுதந்திர ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் பெரெஸ்-லுகோன்ஸ் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |