அரச பயங்கரவாதத்தை பலப்படுத்தி நாட்டை ஆளத்துடிப்பதை ஏற்க முடியாது - அருட்தந்தை சத்திவேல்
அரச பயங்கரவாதத்தை பலப்படுத்தி நாட்டை ஆளத்துடிப்பதை ஏற்க முடியாது, இதற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (27.01.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் மக்கள் சக்தியை இழந்து விடுவோம் எனும் பய நிலையிலும் மக்கள் விடுதலை முன்னணி மக்களின் விடுதலையை மறந்து முதலாளித்துவத்தின் பாதையில் பயணிப்பதால் தம்மை பாதுகாத்துக் கொள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சட்டமாக்க துடிப்பதாக உணரமுடிகிறது.
வன்கொடுமை சட்டம்
இது அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார தோல்விகளையே வெளிப்படுத்துகின்றது. தேர்தல் காலத்தில் "பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் அதற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வர மாட்டோம்" என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை இது மீறும் செயல் மட்டுமல்ல வாக்களித்த மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்து சடலங்களாக மட்டும் வாழ வைக்கும் வன்கொடுமை சட்டமுமாகும்.
அரச பயங்கரவாதத்தை பலப்படுத்தி நாட்டை ஆழத்துடிப்பதை ஏற்க முடியாது. இதற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்க மக்களின் கருத்தறிய வைத்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தில் அரச பயங்கரவாதம் உச்சம் தொட்டுள்ளதை காணலாம்.
பயங்கரவாத தடை சட்டம் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜெயவர்தனவினதும் ஐக்கிய தேசிய கட்சியினதும் கொடிய முகத்தினை தமிழர்கள் கண்டார்கள்.
தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தில் அன்று ஜே.ஆர்.ஜயவர்தனவிற்கும் அவரது கட்சிக்கும் இல்லாத வன்கொடுமை முகம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இருப்பதாகவே மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஜனநாயக சோசலிச குடியரசு
இவர்கள் இதை சட்டமாக்கினால் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு எனும் சொற்களில் பொதிந்துள்ள முழு அர்த்தமும் அரச பயங்கரவாதத்தால் காணாமல் ஆக்கப்பட்டு விடும். தமிழர்களை பொறுத்தவரையில் இது எப்போதோ காணாமலாக்கப்பட்டுவிட்டது. இதுவா தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு கூறிய மாற்றத்தின் அடையாளம் இதுவா?
தேசிய மக்கள் சக்தி கூறும் வளமான நாடு அழகான தேசம் என்பதன் தோற்றப்பாடு? இலஞ்சம் மற்றும் ஊழல்வாதிகள், பாதாள உலகினர், உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் காரர்கள், அதன் விநியோகஸ்தர்கள், அரசு வளங்களையும் சொத்துக்களையும் கொள்ளையடித்த அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் சிறையில் தள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இது அரசியல் பலத்தினால் வளர்க்கப்பட்ட ஒன்று.
இது நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும். அச்செயல் மட்டுமே அரசியலாக முடியாது.அதனை வைத்து தேசிய மக்கள் சக்தி அரசியல் நாடகமாடுகின்றது. மக்கள் வறுமையில் இருந்து மீள முடியாது துடிக்கின்றனர். நாட்டு மக்களுக்கு தமது எதிர்காலம் தொகுப்பில் நம்பிக்கை இல்லை ஆட்சியாளர்களின் அரசியல் பொருளாதாரம் அவிழ்த்து விடயத்தில் தெளிவு தென்படாத நிலையில் தனது தோல்விகளை மறைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாதத்தை பலப்படுத்தும் சட்டத்தை கொண்டு வருவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
கடந்த கால அரசியல் ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்க மன நிலையில் இருந்து தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க எந்தவிதமான தீர்க்கமான செயற்பாட்டிலும் இறங்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை கேட்டு அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கு தமிழர்களை பயங்கரவாதிகளாக்கி அந்நிய நாடுகளின் துணையோடு இனப்படுகொலைக்கு நிறைவேற்றி மகிழ்ந்தனர்.
யுத்தம்
இதற்குதேசிய மக்கள் சக்திக்குள் மறைந்து ஆட்சியை கைப்பற்றியிருக்கும்ருக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கு பெரும் பங்குண்டு. இந்த யுத்தமே நாட்டை அனைத்து வழிகளிலும் வீழ்ச்சிக்கு கொண்டு சென்றது. இதன் முதல் முழு பொறுப்பையும் மக்கள் விடுதலை முனையில் தேசிய மக்கள் சக்தியுமே ஏற்க வேண்டும். இவ் வீழ்ச்சிலிருந்து எழ முடியாத நிலையில் மக்கள் எழுச்சியை தடுப்பதற்கு புதிய சட்டத்தை கொண்டு வருவது அரசியல் நாகரீகமற்ற செயலாகும்.
மேலும் தற்போதைய ஆட்சியாளர்கள் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளிலும் நாடுகளோடு ரகசிய ஒப்பந்தங்களையும் செய்துள்ளனர் ஒரு காலத்தில் வெளிநாடுகளோடு செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் நாடாளுமன்றில் வெளியிட வேண்டும் எனக் கூறிய அனரகுமார திசாநாயக்கவின் ஆட்சியிலேயே அவ்வாறான ஒப்பந்தங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. நாட்டின் இறைமை காட்டிக் கொடுக்கப்படுகின்றது. வல்லரசுகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலையில் மக்களுடைய எதிர்ப்பினை சமாளிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்களுக்கு புதிய பயங்கரவாத சட்டம் தேவையாக உள்ளது.
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை முன் வைப்பதன் இன்னும் ஒரு முக்கிய நோக்கம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தமிழர்கள் தமது பாரம்பரிய தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணய உரிமை தொடர்பான கருத்தாடலிலும் அதை நோக்கிய அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இலக்கு
இதனை முற்று முழுவதுமாக அழித்து அரசியல் ரீதியில் தமிழர்களை எழ முடியாமல் இறுதி அரசியல் முள்ளிவாய்க்காலுக்குள் தள்ளுவதே இவர்களின் இலக்கு. அதற்கு ஏற்ற வகையிலேயே விடயங்கள் புதிய சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. எமது அரசியல் பேசப்படும் இடங்கள் தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாகவும் அறிவிக்கலாம்.
இதனை வடகிழக்கு தமிழர்களின் ஆதரவோடு செய்வதாக காட்டிக் கொள்வதற்கும் முனைகின்றனர். இதற்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தி, எமது மக்களை அரசியல் ரீதியில் பலப்படுத்த வேண்டுமானால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு முழு அளவில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தால் தமிழர்கள் அடக்கி கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.
தற்போது மக்கள் முன் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் மூலம் முழு நாட்டையுமே அடக்கி ஒடுக்கி மக்களை ஆழ நினைக்கின்றனர். இத்தகைய அரசியல் அபாய நிலையில் இருந்து தமிழர்கள் தம்மை தற்காத்து அரசியலை நகர்த்தவும் தெற்கின் மக்களோடு அவர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பவும் நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் போராட்டங்களுக்கு எமது ஆதரவை வெளிப்படுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். அதுவே எமது அரசியல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |