யுத்தப் பதற்றத்தை முடிவிற்கு கொண்டு வருமா தந்தை - மகளின் கண்ணீர் போராட்டம்? வைரலாகும் காணொளி
உக்ரைனில் ரஷ்யா வான், கடல், தரை என அனைத்து விதத்திலும் தாக்குதல் நடத்தி வருவதால், தலைநகர் கிவியில் இருந்து பாதுகாப்பான இடங்களைத் தேடி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், போர் சூழலில் மகளை கண்ணீருடன் அனுப்பி வைக்கும் தந்தையின் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காண்போரை உருக வைக்கும் வகையிலான இந்த காணொளி வெடித்துச் சிதறும் குண்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உக்ரைனில் நடக்கும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருமா என சமூக ஊடகங்களில் பலரும் தமது ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், 16 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் இராணுவ பணிகளில் ஈடுபட வேண்டும் என உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட தயாரானால், அவர்களுக்கு ஆயுதம் வழங்கவும் அரசு தயாராக இருக்கிறது.
இதனால் உக்ரைன் ஆண்கள் அங்கிருந்து வெளியேற அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவொரு சூழ்நிலையிலேயே, மனைவி மற்றும் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்புவதற்கான பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்த தந்தையின் உணர்ச்சிகரமான நிமிடங்கள் காணொளியாக பதிவாகி பார்ப்போர் இதயங்களை இரத்தக்கண்ணீர் சிந்த வைத்துள்ளது.