தந்தையும் மகனும் வெட்டிக்கொலை: மகளின் காதலனின் கொடூரச்செயல்
அநுராதபுரம் மாவட்டம், கெக்கிராவை பிரதேசத்தில் தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் நேற்று (25.06.2023) இடம்பெற்றுள்ளது.
மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தையும், மகனுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவை பிரதேசத்தில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவி ஒருவர், அப்பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டி சாரதியான 26 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இதற்கு மாணவியின் தந்தையும், சகோதரரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.
வலுக்கட்டாயமாக செயற்பாடு
இந்நிலையில், நேற்று (25.06.2023) தனது காதலியின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற காதலன், காதலியை வலுக்கட்டாயமாக தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது காதலன் மீது மாணவியின் தந்தையும், சகோதரரும் கொட்டன்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த காதலன், தனது முச்சக்கரவண்டியில் மறைத்து வைத்திருந்த வாளால் மாணவியின் தந்தை மற்றும் சகோதரரை சராமரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
53 வயதுடைய காதலியின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியானதையடுத்து 25 வயதுடைய காதலியின் சகோதரர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26.06.2023) சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இளைஞரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |