கொழும்பில் கார் விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகை - இரண்டு பெண்கள் படுகாயம்
கொழும்பில் கார் விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகை ஆயிஷா திசாநாயக்க வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி காலை 11.00 மணியளவில் பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் கார் நிறுத்துமிடத்தில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 26 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
காயமடைந்த பெண்களில் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும், மற்றொருவர் ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரால் தெரிவித்தனர்.

நடிகை ஆயிஷா திசாநாயக்க ஓட்டிச் சென்ற கார், வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் கார் நிறுத்துமிடத்தில் திடீரென பின்னோக்கிச் சென்று, இரண்டு பெண்கள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஹோட்டலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் பலத்த காயமடைந்ததாக பொலிஸாரால் மேலும் தெரிவித்தனர். விபத்தில் ஒரு பெண்ணின் முதுகெலும்பும், மற்றொரு பெண்ணின் கால்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்த காரணமாக காரை ஓட்டி வந்த நடிகையும் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி 1990 அம்புலன்ஸில் ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் கைது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரான நடிகை, கடந்த 23 ஆம் திகதி கங்கோடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் 250,000 ரூபாய் பணமும் வழங்க நடிகை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.