33 ஆண்டுகளாக ரோஹன விஜேவீரவின் அஸ்தியை ஏற்க மறுக்கும் குடும்பத்தினர்-ஜே.வி.பியும் ஏற்கவில்லையாம் என தகவல்
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் அஸ்தியை பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினரும் கட்சியினரும் மறுத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜனக்க மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.
அஸ்தி பெற்றுக்கொள்வதாக கூறிய விஜேவீரவின் புதல்வரும் பெற்றுக்கொள்ளவில்லை
பல வருடங்களாக என்னிடம் இருக்கும் ரோஹன விஜேவீரவின் அஸ்தியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அவரது புதல்வர் உவிந்து விஜேவீர உள்ளிட்ட குடும்பத்தினரிடம் கோரிய போதிலும் எவரும் இதுவரை பதிலளிக்கவில்லை.
அஸ்தியை பெற்றுக்கொள்வதாக உவிந்து விஜேவீர சில மாதங்களுக்கு முன்னர் வாக்குறுதி வழங்கிய போதிலும் அதனை பெற்றுக்கொள்ள வரவில்லை எனவும் ஜனக்க மல்லிமாராச்சி கூறியுள்ளார்.
விஜேவீர கொல்லப்பட்டு எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் 33 ஆண்டுகள் நிறைவு
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீர கொலை செய்யப்பட்டு எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் 33 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு, மக்கள் விடுதலை முன்னணி வருடந்தோறும் கார்த்திகை வீரர்கள் தினம் என்ற பெயரில் அனுஷ்டிப்பு நிகழ்வை நடத்தி வருகிறது.
1989 ஆம் ஆண்டு ரோஹன விஜேவீர, கண்டி மாவட்டம் உலப்பனை பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு பொரள்ளை கொல்ஃப் மைதானத்தில் வைத்து நவம்பர் 13 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
சுட்டுக்கொல்லப்பட்ட அவரது உடல் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டதுடன் அவரது அஸ்தியை மக்கள் விடுதலை முன்னணியினர் ஏற்க மறுத்ததன் காரணமாக மயானத்தின் ஊழியர் ஒருவர் அதனை ஜனக்க மல்லிமாராச்சியிடம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஜனக்க மல்லிமாராச்சி, மக்கள் விடுதலை முன்னணி விஜேவீரவின் அஸ்தியை பொறுப்பேற்கவில்லை. அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் பொறுப்பேற்கவில்லை.
இரகசியமான இடம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அஸ்தி
இறுதியில் விஜேவீரவின் அஸ்திக்கு நான் உரிமையாளராக இருக்கின்றேன். எனது அரசியலும் விஜேவீரவின் அரசியலும் எந்த வகையிலும் ஒத்துபோகாது என்றாலும் எமது கலாசாரத்திற்கு அமைய அவரது அஸ்திக்கு கௌரவம் கிடைக்க வேண்டும்.
இதனால், நான் அந்த அஸ்தியை பாதுகாப்பான இரகசியமான இடம் ஒன்றில் வைத்துள்ளேன் எனக்கூறியுள்ளார்.
ஜனக்க மல்லிமாராச்சி, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சராகவும் ஜனாதிபதிக்கு நெருக்கமாக இருந்தவருமான காலஞ்சென்ற வீரசிங்க மல்லிமாராச்சியின் புதல்வர். ஜனக்க மல்லிமாராச்சியின் சகோதரரான ஜனந்த மல்லிமாராச்சி, 1987-89 ஆம் ஆண்டு வன்செயல் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.