மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் குறித்து புலனாய்வு பிரிவு விசாரணை
மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்ய உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
போலியான ஸ்டிக்கர்களை ஒட்டி மோசடியான முறையில் மதுபான போத்தல்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
போலியாக மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதனையும், வரி செலுத்துவதனை தவிர்க்காதிருக்கவும் இந்த ஸ்டிக்கர் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த ஸ்டிக்கர்கள் போலியாக அச்சிடப்பட்டு ஒட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலி ஸ்டிக்கர்கள் விற்பனை
இந்த மோசடி தொடர்பில் மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயக அலுவலகம் தமக்கு அறிக்கை வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பாரியளவில் போலி ஸ்டிக்கர்களுடன் மதுபான போத்தல்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு மதுவரித் திணைக்களம் நிதி அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவிடம் வழங்கி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.