புத்தர் சிலைகள் தொடர்பில் கனடாவில் இருந்து வந்த எச்சரிக்கை! ஞானசாரரின் புலம்பல்
கடனாவில் வசிக்கும் அயூப் ஹஸ்மின் என்பவர் தனது முகநூல் பதிவில், புத்தர் சிலைகளை உடைப்பது தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திருகோணமலை சம்பவம்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவத்தை தொடர்ந்து அயூப் ஹஸ்மின் தனது முகநூல் பதிவில் “புத்தர் சிலையை உடைக்கும் குழுவொன்றை உருவாக்கும் வரை நீங்கள் காத்திருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
2006-2007ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அமைப்பொன்றின் மாணவர் அணியின் முன்னாள் தலைவர் இந்த அஸ்மின். 2013 மாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிட்டார், ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இருப்பினும், அவர் TNA இன் இரண்டு போனஸ் ஆசனங்கள் மூலம் வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு குறித்து முதலமைச்சருக்கு உதவும் நோக்கில் அவர் நியமிக்கப்பட்டார்.
பிரிவினை வாதம்
இவரின் அணியே அன்று மாவனல்லை புத்தர் சிலையை உடைத்தனர். நல்லாட்சி அரசாங்கத்திலும் நாட்டில் பிரிவினை வாதம் மெதுவாக தலைதூக்கி பாரிய வெடிப்பை வெளிப்படுத்தியது.
அஸ்மின் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என சிந்தனை கொண்டவர். TNAவுடனும் தொடர்பில் இருந்தவர். இவர் பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்படுவதாக தோன்றுகிறது.
இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார். இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மற்றும் அரசியல் உயர் பீடங்கள் சோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.