உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்த 64 பேர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக இன்று உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரைக் கைது செய்துள்ளனர்.
அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு வெவ்வேறு வழக்குகளைக் கொண்ட 69 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுள் 5 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களைக் கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுராதபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான்
முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது
நீதிமன்றிற்கு இவர்களை அழைத்துவர முடியாததை அடுத்து அவர்களைக் காணொளி மூலமாக
எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
