நள்ளிரவு தாண்டியும் ஒடிசாவில் தொடரும் மீட்பு பணிகள்: உயிரிழப்பு எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு! 900க்கும் மேற்பட்டோர் காயம்(Video)
ஒடிசா தொடருந்து விபத்தில் சிக்கி இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில் அவசரகால பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
ஒடிசா விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற விபத்து செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக ஒடிசா மாநில முதலமைச்சரை தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கின்றது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் #CoromandelExpress விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் @Naveen_Odisha அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) June 2, 2023
விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது… https://t.co/Gh5H4jI0JO
இரண்டாம் இணைப்பு
கோரமண்டல் விரைவு தொடருந்து ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு தொடருந்துடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 120 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என ஒடிசா தீயணைப்புத்துறை தலைவர் சுதான்ஷூ சாரங்கி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் போது 18க்கும் மேற்பட்ட தொடருந்து பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஒடிசாவில் 3 தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு தொடருந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்வாறு தடம்புரண்ட விரைவு தொடருந்து மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா விரைவு தொடருந்து மோதி 10க்கும் மேற்பட்ட தொடருந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
மேலும் சரக்கு தொடருந்து ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.