ஆசியாவின் ஆச்சரியம் தெருவில் சரிந்தது! கொழும்பில் அம்பலமான ஆதாரம்
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண் ஒருவரே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளார். எனினும் அங்கிருந்த இளைஞன் ஒருவர் குறித்த பெண்மணிக்கு முதலுதவி வழங்கி மயக்கத்தை தெளிய வைத்துள்ளார்.
காலையில் இருந்து உணவு, நீரின்றி வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்த புகைப்படம் இலங்கை முழுவது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இதேவேளை நாடு முழுவதும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கின்றனர். எனினும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரனையுடன் கொழும்பு - புத்தளம் வீதியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிளோட்ட போட்டி இடம்பெற்று வருகிறது. இது குறித்து மக்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதனையடுத்து வாகன மோட்டார் சைக்கிளோட்டப்போட்டிக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதே தமது இலட்சியம் சூளுரைத்துள்ள ராஜபக்ஷ சகோதர்கள், அதற்காக ஆட்சிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் உயர்மட்ட வர்க்கத்தினர் தொடர்ந்தும் உச்ச நிலையில் உள்ளபோதும், சாதாரண மக்கள் இன்று நடுத்தெருவில் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சமகால அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயலை 69 இலட்சம் மக்கள் தற்போது உணர தொடங்கியுள்ள நிலையில், ஆசியாவின் ஆச்சரியம் தெருவில் சரிந்துள்ளதாக மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபடும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாலைத்தீவில் உள்ள பறக்கும் பலகை பயிற்றுவிப்பாளர், நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.