அரசத்துறையில் கடுமையான செலவீனக் கட்டுப்பாடு! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அரசத்துறை செலவினங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான திறைசேரி சுற்றறிக்கையை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு பொதுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த உத்தரவைப் பின்பற்றத் தவறுபவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அமைச்சு செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சவால்கள்
அரசாங்கம் எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்கள் காரணமாக அரச செலவினங்களைக் குறைக்குமாறு அவர்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பை நிறுத்துவதற்கான உத்தரவு இருந்த போதிலும் இரண்டு மாகாண நிர்வாகங்கள் 600 பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிட்டுள்ளதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எரிபொருள், மின்சாரம், நீர் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட சேவைகளின் பயன்பாடு கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்கள் தொடர்பான புதிய வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தங்களில் நுழைவது மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அந்தந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுடன் சரியான தேவை மதிப்பீடு மற்றும் செலவுபயன் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய ஒப்பந்தங்களை நீடிக்க முடியும்.
திறைசேரியின் முன் அனுமதி அவசியம்
குத்தகையை நீடிப்பதற்கு முன் பொது திறைசேரியின் முன் அனுமதி அவசியமாகும். ஆட்சேர்ப்பு உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும், வணிகத் தொடர்ச்சியைத் தக்கவைக்க தேவையான ஆட்சேர்ப்பு இருந்தால், அதற்கு பொது நிறுவனங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அல்லது தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரம் இருக்க வேண்டும்.
ஊழியர்களுக்கு புதிய கொடுப்பனவுகள் வழங்கப்படக்கூடாது, அனைத்து நிறுவனங்களும் மின்னணு தொடர்பு தளங்களுக்கு மாறவும், காகித பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியுதவி பயிற்சி திட்டங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்றாலும்,
உள்நாட்டு நிதியை வெளிநாட்டு பயணம் அல்லது பயிற்சி திட்டங்களுக்கு பயன்படுத்த
முடியாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.