குறிஞ்சாக்கேணி பாலப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு பிரதி அமைச்சர் பணிப்பு!
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மிகத் துரிதமாக முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
குறித்த பகுதிக்கு நேற்றையதினம்(17.4.2026) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதி அமைச்சர், பாலத்தின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்டறிந்ததுடன், பணிகளில் நிலவும் இழுபறிகளை நீக்கி கட்டுமானத்தை விரைவுபடுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
சவுதி அபிவிருத்தி நிதியத்தின் கீழ் சுமார் 1200 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளது.
கோரிக்கை
இதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா அரசாங்கம் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி, குறிஞ்சாக்கேணி ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 8 பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
[CV0KQஸ
இத்துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நிரந்தரப் பாலம் ஒன்றின் தேவை குறித்து மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இத்திட்டத்திற்கு முதலிடம் வழங்கியது.
இன்றைய விஜயத்தின் போது, மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து சிரமங்கள் குறித்து கேட்டறிந்த பிரதி அமைச்சர், இந்த ஆட்சிக் காலத்திற்குள் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதே இலக்கு எனக் குறிப்பிட்டார்.


