இலஞ்சம் பெற முயன்ற கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு 28 வருட சிறைத்தண்டனை
இலஞ்சம் பெற முயன்ற இரண்டு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக 28 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஹெரோயின் வைத்திருந்த இரண்டு பெண்களைக் கைது செய்த குறித்த அதிகாரிகள் இருவரும், அந்தப் பெண்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யாது, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, இலகுவாக தப்பித்துக் கொள்ள வழி செய்துள்ளனர்.
அதற்காக குறித்த கலால் திணைக்கள அதிகாரிகள் இருவரும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா இலஞ்சம் தருமாறு கோரியுள்ளனர்.
இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள்
இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குறித்த கலால் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தது.
இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில், தலா இருபத்து எட்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை ஏழு வருடங்களில் கழிந்து செல்லுமாறு ஏக காலத்தில் தண்டனை அனுபவிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |