குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி இன்று ஆரம்பம்
புதிய இணைப்பு
குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில் இன்று(30) நண்பகல் 12 மணிவரைக்கும் அப்பகுதியில் எதுவித எலும்புக்கூடுகளோ அல்லது தடயப் பொருட்களோ மீட்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருக்கள்மடத்தில் இருக்கின்ற மனிதப்படுகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினம் 30 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கிலே அடையாளப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட அந்த இடத்தை ஏற்கனவே ரெடார் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு நிலத்திற்கு கீழே அடையாளப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அதன் அடிப்படையில் நீதிமன்றத்தின் கட்டளைக்கு ஏற்ப முதற்கட்ட நடவடிக்கையாக இந்த பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு சுமார் 5 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட பரப்பளவை கொண்ட பிரதேசத்தில் அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த இடத்தை சுமார் 9 அடி ஆழத்திற்கு அகழ்வதற்கு ஆரம்பத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது பகுதிகளாக பிரிக்கப்பட்டு தற்போது ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் முதல் படியை எடுத்து சல்லடை செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த பணி இன்றிலிருந்து எதிர்வருகின்ற ஐந்து நாட்கள் அல்லது ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இன்று மாலை 8 மணி வரைக்கும் நடவடிக்கையை தொடர்வதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்திருக்கின்றார். இந்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு இந்த அகலும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இந்நிலையில் இன்னும் சிலரால் வேறு பகுதிகளும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆரம்பகட்ட நடவடிக்கையாகதான் இந்த குறிப்பிட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை அகழ்வு செய்யும் பணிகள் இன்றைய தினம்(30.03.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2014ஆம் ஆண்டு வழக்கு இடைநிறுத்தப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது
அதனைத் தொடர்ந்து பின்னர் 2017ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் இவ்வழக்கு விசாரணை மீள ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2025ஆம் ஆண்டு குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான பிரதேசம் அகழ்விற்கான கட்டளை கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டு கடந்த மாரச் 09ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது இன்றைய தினம் குறித்த பகுதியை அகழ்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் நிமித்தம் இன்றைய தினம் குறித்த மனிதப் புதைகுழி அமைந்துள்ள பிரதேசம் எனச் சந்தேகிக்கப்படும் பகுதியில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டு திரும்பிய 167 ஹஜ் யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கடத்தி காணாமலாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த மனிதப்புதைகுழி பகுதி அகழப்படுகின்றது.
அகழ்வின் போது களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், வழக்கின் சட்டத்தரணிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸார், மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடயவியல் பிரிவு, அகழ்வாரய்ச்சித் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகத்தினர், பாதுகாப்புப் பிரிவினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் குறித்த பிரதேசத்தில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - குமார்



